திங்கள், 16 பிப்ரவரி, 2009

கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்

http://hainallama.blogspot.com/2009/02/blog-post_15.హ్త్మ్ల్



கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்

'இவள் எந்த நேரமும் టీవీ முன்னாலைதான். கண்கெடப் போகுது எண்டு சொன்னாலும் கேக்கிறாளில்லை.'

'மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.'

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்புலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடனேயே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும். வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும். ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன.

கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும். எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும். உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மையே. வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால் (Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே. வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும். தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.

கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும். கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன்;ஒட்சினெதிரிகள் (Antioxidents) என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு
(cataract and age-related macular degeneration) ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல. கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொப்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணனித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.
இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, மூட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே. ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.

ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும். சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழவகைகள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்

1 comments:

Suresh சொன்னது…

prabhu

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

கருத்துரையிடுக