வியாழன், 29 ஜனவரி, 2009

என்ன சத்தியமான வார்த்தை!.

தோழர்களே என்சொல்லை நம்புங்கள்,
உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன்.
மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.

"இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4 வது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி" - 17.7.1961 விடுதலை

என்ன சத்தியமான வார்த்தை!.

வியாழன், 22 ஜனவரி, 2009

"புறநானூற்றுத் தாய்"

பழைய கள், வேறு மொந்தையில்!
பொதுவா "புறநானூற்றுத் தாய்" ன்னு குறிப்பிட்டு பேசுறதை கேள்விப்பட்டு இருப்பீங்க. அது ஏன் அப்படிக் குறிப்பிட்டு பேசுறாங்க? அதுல என்ன சிறப்பு? இந்தக் கேள்வியை என்னோட சிநேகிதன்கிட்ட கேட்டேன்? அவரு பொதுவா, எதோ சொல்லி சமாளிச்சாரு. ஆகவே, இதைப்பத்தி எனக்குத் தெரிஞ்சதை பதியலாம்னு நினைக்கவே இந்தப் பதிவு.புறநானூறு சங்ககாலத்துல ஒன்றுக்கு மேற்ப்பட்ட புலவர்களால எழுதப்பட்டதுன்னு சொல்லுறாங்க. அதுல பதினாறு பேர் பெண்கள்ன்னும் சொல்லுறாங்க. குறிப்பா ஔவையார், காக்கைபாடினியார், வெள்ளி வீதியார், நல்முல்லையார் இவங்க எல்லாம் முக்கியமானவங்க. அடுத்தது அகநானூறு. இதுவும் அப்படித்தான் பல புலவர்களால எழுதப்பட்டது. அகநானூறு அகத்திணையில எழுதப்பட்டது. அப்படின்னா? அது வந்துங்க ஓர் ஆணும் பெண்ணும் சேந்து இன்ப துனபங்களை அனுபவிக்கிறாங்க பாருங்க. அது அக வாழ்வு. அல்லது வீட்ல, குடும்பத்துல, காதலன், காதலி இவங்களுக்குள்ள நடக்குறதுன்னும் வெச்சுக்கலாம். இது சம்பந்தமா எழுதினது அகநானூறு. இந்த போர், அரசியல், சாணக்கியத்தனம் இதெல்லாம் பொது வாழ்வு அல்லது புறவாழ்வுன்னு சொல்லாம் இல்லீங்களா? இதைத்தான் புறத்திணைன்னு சொல்லுறாங்க. இந்த புறத்திணை சார்ந்து எழுதினது புறநானூறு. சரி இந்த அகநானூறு, புறநானூறு யாரெல்லாம் எழுதினாங்க? அதுக்கு நீங்க, எம்மோட முந்தைய பதிவப்பாத்து தெரிஞ்சுக்குங்க.சரி, இப்ப இந்த பின்னணியோட நம்ம தலைப்பு சம்பந்தப்பட்ட விசயத்துக்கு வருவோம். போர்க்காலங்கள்ல, அரசியல்ல, சங்ககாலத்துப் பெண்கள் எப்படியெல்லாம் இருந்தாங்கன்னு நிறைய விசயங்களை ஔவையார், காக்கைப் பாடினியார் இப்படி நெறையப் பேர் எழுதி இருக்காங்க. அதுல தாயானவளின் பங்கு, அவங்க கிட்ட இருந்த வீரம், இதைப்பத்தியெல்லாம் நொம்ப முக்கியமா சொல்லப்பட்டு இருக்குங்க. அதுல நாம இப்ப பாக்கப் போறது போர்க்களத்துல மகனைப் பறி குடுத்த தாய்.தன்னுடைய நாட்டுக்கும் எதிரி நாட்டுக்கும் போர் மூளுது. போர்ல தன்னைப் பெற்ற தந்தை, உற்ற சகோதரன், கொண்ட கணவன் இப்படி தன்னைச் சார்ந்த ஆண்கள் எல்லாம் மார்பில் விழுப்புண் வாங்கி வீர மரணம் அடைஞ்சுபோன சேதியோட, போருக்குப் போய்ட்டு திரும்பின ஊரு சனங்க எல்லாம் அந்த அந்தி சாயுங்காலம் ஊருக்குள்ள வர்றாங்க. ஆனாலும் சேதி கேட்டு, ஆண் பிள்ளையப் பெத்த இந்தத் தாய் இடிஞ்சு போயிடலை. "எனக்கு இன்னும் நான் பெத்த புள்ளை இருக்கான். நாளைக்கு, என்னோட வீட்டு முறைக்கு ஆள் அனுப்ப நான் சிங்கம் மாதிரி புள்ளய பெத்து வளர்த்து வெச்சு இருக்கேன்"னு சொல்லி பெருமைப்பட்டுகிட்டா அந்த தமிழின வீரத்தாய்."தன்னோட நாடு எதிரி நாட்டுப் படைங்க கிட்ட மண்டி போடுவதா? ஒருக்காலும் அது நடக்காது"ன்னு வீராவேசம் கொண்டு, மகன்கிட்ட தன்னோட நாடு, சிறப்பு, அருமை பெருமைகள்னு நாலையும் எடுத்துச் சொல்லி, பாலும் பழமும் அறுசுவை உணவும் ஊட்டி நித்திரை கொள்ளச் செய்யுறா அந்தத் தாய். அப்புறம், கோழி கூப்பிட, கிழக்கு வெளுக்கவே, எழுந்து, தானும் குளிச்சு, தன்னோட மகனையும் எழுப்பி, குளிக்க வெச்சு, அவனுக்கு வெற்றித் திலகம் வெச்சு, நல்ல வெள்ளை உடுப்பு போட்டுவிட்டு, "போய் வா மகனே! வென்று வா!!"ன்னு சொல்லி, ஊரு சனத்தோட சனமா, தன்னோட பிள்ளயயும் வேலோட அனுப்பி வெச்சுட்டு, "தன்னோட வீட்ல இருந்தும் நாட்டோட பெருமையை நிலை நாட்ட இன்னைக்கு ஆள் போயிருக்கு" ன்னு நெனைச்சு பெருமையோட நிம்மதிப் பெருமூச்சு விட்டா அந்தத் தாய். அப்புறம் அந்த நிம்மதியில அசந்து தூங்குறா.தூங்கி எழுந்து போருக்குப் போன சனங்களை எதிர் நோக்கி, ஊர்த் தலைவாசல்ல ஊர் சனங்களோட, இந்த வீரத்தாயும் காத்துக்கிட்டு இருக்குறா. மாலைக் கருக்கலோட, போருக்குப் போன சனங்களும் திரும்பி வர்றாங்க. வந்த சனங்க, "உன்னோட மகன் புறமுதுகு காமிச்சு போர்ல செத்துப் போய்ட்டான்"னு சொல்லுறாங்க. செத்துப் போன மகனை நினைச்சு ஒரு வருத்தமும் படலை இந்த வீர மகராசி. மாறா, "என்ன, என் மகன் புறமுதுகு காண்பித்து மறப்போரில் மாய்ந்து போனானா? ஒருக்காலும் இருக்காது! அப்படி ஒரு வேளை, அவன் புறமுதுகு காண்பித்து இறந்து இருப்பான் ஆயின், அவன் உண்டு வளர்ந்த என் மார்பகங்களை அறுத்து எறிவேன்!" ன்னு சொல்லி எரிமலையா கொதிச்சு ஆவேசப்படுறா. கண்ணு ரெண்டும் சிவந்து கனலா கக்குது.அதே வேகத்துல வீட்டுக்குப் போய் கூரையில செருகி வெச்சு இருந்த வாளை உருவி கையில எடுத்துட்டு போர்க்களத்துக்குப் போறா. போன இடத்துல ரெண்டு நாட்டு வீரர்களோட உடல்களும் அங்கங்க, அங்கங்க, நாலா புறமும் சிதறிக் கெடக்குது. கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்க ஒவ்வொரு உடலையும் தன்கிட்ட இருந்த அந்த வாளால புரட்டி புரட்டி "இது தன்னோட மகனா?" ன்னு பாத்துக்கிட்டே போறா. நேரம் ஆக, ஆக, ஆத்திரமும் கோபமும் அதிகமாகுதே ஒழிய, கொறஞ்ச பாடில்லை. இப்படியே புரட்டிப் பாத்துக்கிட்டு போகும்போது, சலிப்புல வேண்டா வெறுப்பா ஒரு உடலை அந்த வாளால புரட்டுறா. அந்த ஒரு நொடி.... அவளோட முகம் அப்படியே உருமாறுது. கவுந்து இருந்த கருமுகில் விலக, சடார்னு அடிக்கிற அந்த சூரியன் மாதிரி அவ மொகம் அப்படியே பிரகாசிக்குது. கீழ குனிஞ்சு அப்படியே அந்த நெஞ்சுல குத்துப்பட்ட குழந்தைய அள்ளி மடியில போட்டுக்கிட்டு சொல்லுறா, "இந்த வீரஞ்ச் செறிந்த மண்ணில், புலிக்குப் பூனையா? என் பிள்ளையின் உடல் எதிரிகளின் பல உடல்களைத் தாண்டி ஊடுருவி வந்து இங்கே மார்பில் விழுப்புண்னுடன் மாய்ந்து கிடக்கிறதே?! அப்படியானால் என் மகன் பல எதிரிகளை காவு வாங்கிய வீரன் இல்லையா? வீரன் இல்லையா??"ன்னு சொல்லி மகன் மறைஞ்சு போனாலும் கூட, தன் மகன் புறமுதுகு காட்டலைங்குற மகிழ்ச்சியில ஆரவாரம் போடுறா!


ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!! இதைத்தான் புறநானூற்றுக் கவிதைல காக்கைப் பாடினியார் பாடுறாங்க:

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்" எனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

http://maniyinpakkam.blogspot.com/

thank you

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

இஸ்ரேல்

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை.

அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?

அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது.

யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (Ahmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?அதுதான் பிரச்னை.

பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழ வழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது.
ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்

நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் முழுதும் வாசிக்க: http://documents.scribd.com/docs/6asfiyuktxkb5fws6xm.pdf

John Pilger: "Palestine is Still the Issue" Why Has This Documentary, Never Been Broadcast On U.S. Media ?Twenty-five years ago, I made a film called Palestine Is Still The Issue. It was about a nation of people - the Palestinians - forced off their land and later subjected to a military occupation by Israel. An occupation condemned by the United Nations and almost every country in the world, including Britain. - John PilgerGaza

மத்திய தரைக்கடல் ஓரம் 40 கிலோ மீட்டர் நீளமும் 10 கிலோ மீட்டர் அகலமும் உடைய ஒரு துண்டு நிலமே காஸா பகுதியாகும். 15 லட்சம் மக்களை அடர்த்தியாகக் கொண்ட பகுதியாகும். 1948-ல் இஸ்ரேல் என்ற நீதியற்ற நாடு உருவானதிலிருந்தே காஸா விடுதலைப் போராளிகளின் பகுதியாகவே விளங்கியது. இஸ்ரேல் உருவாகியபோது காஸா பகுதி எகிப்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. 1967-ல் நடந்த அரபு இஸ்ரேல் போரின் போது காஸாப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.2005-ல் காஸாவிலிருந்து யூத குடியிருப்புகளை வெளியேற்றம் செய்யப் போவதாக இஸ்ரேல் அரசு போக்கு காட்டியது. ஆனால் பாலஸ் தீனத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிட முனைந்தது. குடிநீரையும், வான்வெளியையும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. காஸா நகரில் மட்டும் 4 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். காஸாவுக்கு அடுத்தபடியாக கான்யூனஸில் 2 லட்சம் மக்களும் மத்திய காஸா மற்றும் ரஃபா பகுதியில் ஒன்றரை லட்சம் மக்களும் வாழ்கின்றனர்.இஸ்ரேலின் இன வெறிக் கொள்கை காஸாவை சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது."அகதிகளின் நாடு"காஸாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள், அகதிப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் ஆவர். இஸ்ரேலின் வான்தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய அப்பாவிகள் அனைவருக்கும் அடைக்கலம் தரும் பூமியாக காஸா விளங்கி வருகிறது. இங்கு செல்வாக்குடன் திகழும் ஹமாஸ் போராளிகளின் ஆளுமையும் அதற்கு முக்கிய காரணமாகும்.ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி ஜபலிய்யா அகதிகள் முகாமில் 1 லட்சத்து 6,091 பேரும், ரஃபா முகாமில் 95,187 பேரும், சதிப் பகுதியில் 57,120 பேரும், கான்யூனிஸ் பகுதியில் 63,219 பேரும், பரெஜில் 28,770 பேரும், மகாஜியில் 22,666 பேரும், தெய்ரில் பலாஹில் 19,534 பேரும் வசிக்கின்றனர்.


http://tamilnenjamhifs.blogspot.com/2009/01/blog-post_06.html

திருநங்கை (Transwoman)

ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய்
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்

.திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். அதாவது "பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள்" திருநங்கைகள் என்று குறிக்கப்படுகின்றார்கள்.பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களே வழக்கத்தில் இருந்தன. அச்சொற்கள் திருநங்கைகளை கேலிபடுத்தும் படியாக அல்லது அந்த பொருளில் பயன்படுத்தப்படுவதால், திருநங்கை என்ற சொல் திருநங்கைகளால் பரிந்துரைக்கப்படுகின்றது.ஒடுக்கலுக்குள்ளாகி விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் அரவாணிகள், பொதுவாகத் தமது குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்துவிடுகிறார்கள். பெண்மை எனும் பாலின அடையாளத்தை பெறுவது அவர்களுக்கு விடுதலையளிப்பதாக அமைகிறது என்ற கருத்து நிலவுகிறது.திருநங்கைகளின் தனித்த பண்பாட்டியற் கூறுகள்மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.கூத்தாண்டவர் திருவிழாஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.இந்திய அரவாணிகள் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற புண்ணியத்தலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய கூத்தாண்டவர் ஆலயத்தில் ஒவ்வோர் சித்திரா பௌர்ணமியன்றும் பல்லாயிரக் கணக்கான அரவாணிகள் கூடுவர்.பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் ஆலயம் அமைந்திருந்தாலும், விழுப்புரம் கூவாகம் ஆலயத்திற்கு மட்டுமே அரவாணிகள் அதிகம் வருகின்றனர். மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான்.குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர். அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.அர்ஜானனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கான முகாந்திரம் உடையவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து அவனை அணுகுகின்றனர். அரவானும் பலிக்கு சம்மதித்தாலும், தனக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் அதனை ஏற்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் இடமே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரவாணிகள் விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர். அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன. எங்கு நோக்கிலும் அரவாணிகள். இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை ஒன்றினைக்கும் விழாவாகவே அமைகிறது. அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நலம் விசாரிக்கவும், தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள், ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக தம்முள் வரித்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர் அரவாணிகள். விடியவிடியத் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடிச்சிட பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது. பொழுது மெல்ல புலரத் துவங்க,அதுவரை ஆனந்தமாய் இருந்த அரவாணிகள் முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று களப்பலிக்குப் புறப்படுகிறான். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.வழியெங்கும், சோகத்துடனும், அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. தன் தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/திருநங்கை


வியாழன், 1 ஜனவரி, 2009

எமனை ஏமாற்றி சுவாஹாதேவியை அக்னி பகவான் அனுபவித்த இன்பக் கதை

அம்மி மிதித்தலும் -
அருந்ததி பார்த்தலும் -
திவசம்கொடுத்தலும் - அர்த்தம் புரியாத வடமொழி மந்திரங்களும்!


அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் காலமாகி விட்டார் என்ற செய்தியை இந்து ஏடு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

அக்னிஹோத்திரம் 102 வயது வரையில் வாழ்ந்தவர்.அவரது 100ஆவது வயது வரையில் - அவரது சொந்தச் சாதியினர், அவர் வேதங்கள் அனைத்தையும் பயின்ற விற்பன்னர் என்றும், காஞ்சி மகாப் பெரியவாளின் வலதுகரமாக, ஆலோசகராகச் செயல்பட்டவர் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கருடன் அமர்ந்து மத சுதந்திரத்திற்கான விதிகளை அரசியல் சட்டத்தில் உருவாக்கியவர் என்றும் ஓகோ, ஓகோ என்று புகழ்ந்து உச்சி மீது வைத்து மெச்சிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவரது 100ஆவது வயதில் அவர் நக்கீரன் இதழில் இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதி - இந்து மதத்தின் பேரால் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பரப்பிடும் மூடநம்பிக்கைகளையும், ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் அவர்களை ஆழ்த்தவும், அவமதிக்கவுமான காரியங்களைக் கண்டித்து - அவர்களின் பாரபட்சமான - ஓர வஞ்சனையான செயல்களை அம்பலப்படுத்தினார். அவற்றிற்கு ஆதாரமாக - வேதங்களையே சுட்டிக் காட்டினார்.இது அவரது சொந்த சாதியினரை ஆத்திரப்பட வைத்தது. அவர்கள் அக்னிஹோத்திரத்தை சந்தித்து அந்தத் தொடர் பிராம்மண விரோதம் என்று கண்டித்தார்கள். உடனே அதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டினார்கள். நிறுத்தா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டினார்கள்.

அவர்களது இச்சகப் பேச்சுக்களுக்கோ, அச்சுறுத்தலுக்கோ - எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்தார் அக்னிஹோத்திரம். தொடர்ந்து எழுதினார்; இந்து மதத்தின் பேரால் நடத்தப்படும் அக்கிரமங்களை - அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். போதாக் குறைக்கு அந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை சடங்குகளின் கதை என்ற தலைப்பில் எழுதி - புரோகிதர்கள் ஓதும் கல்யாண மந்திரங்கள் - கருமாதி மந்திரங்கள் எல்லாம் எவ்வளவு ஆபாசமானவை, முட்டாள்தனமானவை - பணம் பறிக்க நடத்தும் தந்திரங்கள் என்பதையெல்லாம் அம்பலப்படுத்தினார்.அவரது எழுத்தில் மடமையைச் சாடும் உத்வேகம் இருந்தது, பகுத்தறிவின் ஒளி துலங்கியது!தந்தை பெரியார் அவர்கள் புரோகிதம் ஒழிந்த திருமணங்களை - சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தியது எவ்வளவு சரியானது என்பதை - சொல்லாமல் சொல்வது போல திருமணச் சடங்குகளை சாடி எழுதினார்.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்று அழைப்பிதழில் போடுகிறீர்களே - அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

விவாகம் என்ற சொல்லுக்கு மணப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு (கடத்திக் கொண்டு) ஓடிப்போவது என்று அர்த்தம் என்று ஆணி அறைந்தது போல சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்தார் அவர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்துதிருமணம் நடத்துவதின் பின்னணியில் - அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் ஓதும் மந்திரங்களில் எவ்வளவு ஆபாசம் - அநாகரிகம் - மடமை பொதிந்து கிடக்கிறது என்பதை அந்த மந்திரங்களை எழுதி அவற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைப் புட்டுப்புட்டு வைத்தார்.-

அம்மி மிதிப்பது; அருந்ததி பார்ப்பது திவசம் செய்வதுபோன்ற மூடநம்பிக்கைகள் பற்றி அவர் தமது சடங்குகளின் கதையில் விளக்கியிருப்பதை மட்டும் படித்தாலே போதும்.உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம் - என்ற முகமனோடு அவர் எழுதியுள்ளவற்றின் ஒரு பகுதி வருமாறு:-


அம்மி மிதிப்பது!

அதாவது பெண்ணை நடை நடையாய் அழைத்து வந்து அம்மியொன்று மீது ஏறி நிற்க வைப்பார்கள். உடனே புரோகிதர்

ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்
அஸ்மே வத்வம் ஸ்திராபவா...

நீ எப்போதும் உன் குடும்பத்தை இந்த கல்லைப் போல ஸ்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது சந்தேகப்பட்டு குடும்பம் என்ற கட்டமைப்பு உடைந்து போகாமல் இந்த கல்லைப் போல குடும்பத்தை கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதன் பின்னணி மலைவாழ் பழங்குடியினரிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது.அதாவது மலைப் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு செய்கையின் போதும் ஒரு கல்லின் மீது ஏறி நின்று இந்த கல்லைப் போல உறுதியாக இக்காரியத்தில் இறங்குகிறேன்.... என சங்கல்பம் எடுத்துக் கொள்வார்கள்.
இதை கவனித்து பிராமணர்கள்... அந்தக் கல்லை தூக்கி கல்யாணத்தில் போட்டார்கள்.மலை மக்களான (கூசயெடள)-ன் வழக்கத்தை... கல்யாணத்துக்கு கொண்டு வந்து விட்டாயிற்று. செங்கல்லை மிதித்தால்... வாழ்க்கையும் செங்கல் போலவே உடையலாம்.அதனால் கருங்கல் தேர்ந் தெடுக்கப்பட்டது. அதுவும் வீடுகளில் கருங்கல்லுக்கு எங்கே போவது... அதனால் அம்மியைக் கொண்டு வரச் சொன்னார்கள்.சட்னி அரைப்பது, குழம்புக்கு உண்டான மசாலா அரைப்பது இவற்றுக்காக பயன்பட்டு வந்த அம்மியைப் பயன்படுத்தி - பிராமணர்கள் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள். அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதுதான் அம்மி மிதிப்பது என்ற சடங்கின் தோற்றம். அதாவது கல்லை மிதிப்பதுதான் இச்சடங்கின் கருத்துரு.ஆனால்... வீடுகளில் கிடைக்கும் கல் அம்மி என்பதால் அம்மி மிதித்தல் ஒரு சடங்காகிவிட்டது.

அம்மி மிதிக்கும்போது அவளது பாதாதி அரவிந்தங்களில் பணிந்து... பூக்காம்புகள் சற்றே பருத்ததைப்போல அமைந்த அவளது கால் விரல்களை தன் உள்ளங்கையால் வருடியபடியே பெருவிரலுக்கு பக்கத்து விரலில் மெட்டியை மாட்டுகிறான் மணமகன்.அப்போது... கல்யாணம் நடத்தி வைக்கும் வாத்யார்... மாப்பிள்ளையைப் பார்த்து, நிமிர்ந்து மேல பாருங்கோ... அருந்ததி பாருங்கோ... என மேல் நோக்கி கை காட்டுகிறார்.பையனும் பேந்த பேந்த மேலே பார்க்கிறான். என்ன அருந்ததி நட்சத்திரம் தெரியுறதா? என கேட்கிறார் வாத்யார். ம்... தெரியுதே... என்கிறான் பையன்.


அதாகப்பட்டது முகூர்த்தம் 5-5.30 ஆக இருக்கலாம். 6-6.30 ஆக இருக்கலாம். ஏன் 9-9.45 ஆக கூட இருக்கலாம். இப்பேர்ப்பட்ட சுபயோக சுப காலை வேளையில்... சாதாரண நட்சத்திரமே தெரியாது. பிறகு எப்படி அருந்ததி நட்சத்திரம் தெரியும்?நான் கலந்துகொண்ட கல்யாணம் ஒன்றில் பையன் இது போலத்தான் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது என சொல்லி விட்டான்.நான்... கொஞ்ச நேரம் கழித்து ஏண்டாப் பயலே... உன் கல்யாண முகூர்த்தம் - 7.30-8.15 விடிந்து 2 மணி நேரத்துக்கும் மேலே ஆகிவிட்டது. சூரியன் வானத்தில் சூப்பராய் ஜொலிக் கிறான்.இப்பேர்ப்பட்ட நேரத்தில் உனக்கு அருந்ததி நட்சத்திரம் எங்கே தெரிந்தது? எனக்கும் கொஞ்சம் காட்டேன் - எனக் கேட்டேன்.அவன்... பதறிப்போய் வாத்யார் தெரியுதுனு சொல்லச் சொன்னார். சொன்னேன் என்றான்.

இவனைப் போல பல மாப்பிள்ளைகள் மந்திரம் ஓதும் புரோகிதர்களின் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.சரி அருந்ததி யார்? உங்களுக்குத் தெரியுமா?சூரிய வம்சத்து மன்னர் பரம்பரை திலிபன், ரகு, அஜன், தசரதன், ராமன் - என புகழ்பெற்றது.

பெரும்புகழ் படைத்த சூரியவம்ச மன்னர் குலத்தின் ராஜகுருவானவர் வசிஷ்டர்.இவரது மனைவிதான் அருந்ததி. இரண்டு பேரும் கணவன் - மனைவி என்றால் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்களாம்.

கற்புக்கரசிக்கு தமிழர்களாகிய நாம் கண்ணகியை காட்டுவதைப் போல... வடக்கத்தியர்கள் காட்டுவதுதான் அருந்ததி. ஆனால்... நாமோ கல்யாணத்தன்று கண்ணகியை மறந்துவிட்டு அருந்ததியைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அருந்ததி - கற்புக்கரசி என்பதற்கான ஒரு கதையும் இருக்கிறது.அதாவது அருந்ததி கற்பு நிரம்பியவள் என்பதற்காக இந்தக் கதை கட்டப்பட்டது. தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும். இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன. பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான். சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.

ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து அவனை அணைத்து தழுவி தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா. இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம் என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.டக்கென அவளை ஓர் எலுமிச்சை பழமாக்கி முழுங்கினான் எமன். சரி இதில் அருந்ததி எங்கே வந்தாள் என கேட்கிறீர்களா?... பொறுமை பொறுமை...அருந்ததியைப் பற்றி சொல்ல வந்துவிட்டு சுவாஹா என்பவளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?... என்னடா இவர் என நினைகிறீர்கள்தானே.அப்படி அல்ல... அருந்ததியின் கற்புசக்தியை நிலைநாட்டத் தான் சுவாஹாதேவி கதையே சொல்லப்பட்டிருக்கிறது.

என்ன பார்த்தோம்?...

எமன், சுவாஹாதேவியை அனுபவித்த களைப்போடு நந்த வனத்தில் தூங்கிப் போனான். அந்த நேரம் சுவாஹாதேவி அக்னி தேவனை தரிசிக்க மோகித்தாள் - அக்னியோடு போகித்தாள்.எமன் விழிப்பதற்குள் அக்னியும் சுவாஹாதேவியும் ஆசை யோடு ஆலிங்கணம் செய்து முத்தத்தால் பரஸ்பர அபிஷேகம் செய்துகொண்டு - அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர்.
எமன் தூங்கும்போது இவர்களின் இளமை விழித்துக் கொண்டு விளையாடிக் களித்தது.எமன் விழித்ததும்... ஒன்றுமறியாதது போல் சுவாஹாதேவி... அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி தனக்குள் விழுங்கி விட்டது வரையில் பார்த்தோம்.எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியோ அக்னியை எலுமிச்சைப் பழமாக்கி ஏற்கனவே விழுங்கிவிட்டாள். அப்படிப்பட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கிவிட்டான்.இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை.

அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?
விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.
எமன் அசந்த வேளையில்...
சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு.
இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.எனவே எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.அப்படியே செய்தான்.வெளியே வந்த சுவாஹாதேவியிடம் உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு என்றார் விஷ்ணு. சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.

ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில் என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான். நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படு கிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்? கேட்டாளா?...
இல்லை.
பிறகு?... அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகள் போல நானே உருவம் எடுத்து வருகிறேன். நீ அனுபவித்துக் கொள் என்று யோசனை சொன்னாள் சுவாஹா.சப்த ரிஷிகள் என்றால் ஏழுபேர். இவர்களில் ஒவ்வொரு ரிஷியின் மனைவியரை போலவும் உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி. இன்னும் ஒருத்தி பாக்கியிருக்கிறாள். அவள்தான் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

ஆறு ரிஷிகளின் மனைவிகளையும் அனுபவித்தவன், அடுத்து கடைசியாக அருந்ததியை அனுபவிக்க தயாராக இருந்தான்.சுவாஹாதேவி தனது சக்தியால் அருந்ததி போல உருவம் எடுக்க முயற்சித்தாள். ம்ஹூம். முடியவில்லை. என்னென்னமோ செய்தாள். ஆனாலும் அருந்ததி போல் அவளால் உருவெடுக்க முடியவில்லை. ஏனென்றால்... அருந்ததி கற்புக்கு அரசி.இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்ததியை பார்த்தபடி... தேவி... நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. இனி... அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும்... உன்னைப் பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று கூறினாளாம்.அதன்படிதான்... இன்னும் கல்யாணத்தின் போது அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

அது காலை மணி 9-9.45 சூரியதேவன் எரியும் நேரமாக இருக்கும்போதும் அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறீர்களே எப்படி?...
உங்கள் மனைவியைவிட அருந்ததிக்கு கற்பு அதிகம் என நீங்கள் நம்புகிறீர்களா?...
அம்மி மிதித்தாயிற்று.
அருந்ததி யாரென்று பார்த்தாயிற்று.
அடுத்து?...
சரி...

இப்போது ஒரு மகன் தன் அம்மாவை இழந்து தவிக்கிறான். தனக்கு பால் ஊட்டியவருக்கே... பால் ஊற்றும் நிலைமைக்கு வந்துவிட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது.இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது. எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக் குழந்தையில் நாம் தூங்கியிருப்போம்.நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைசான்றோன் எனக்கேட்ட தாய்...என வள்ளுவரே தாய்மையின் உயர்வை... மகனை வைத்துச் சொல்கிறார்.தாய்தான் உலகத்தின் ஆதாரம். பெருமாளின் மனைவியைக் கூட தாயார், தாயார்... என மரியாதையாக அழைப்பவர்கள் நாம். அப்படிப்பட்டவள் தாய். இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும்... ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிக் கொண்டே வருகிறது பூமி.அப்பேர்ப்பட்ட தாயை இழப்பதே எவ்வளவு பெரிய துன்பம்? அந்தத் துன்பத்தை தணித்துக் கொள்வதற்காக... தாய்க்கு திவசம் செய்யப் போகிறான் ஒரு பாமரன்.அப்போது புரோகிதன் சொல்கிறான்

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம...

எங்க அம்மா ராத்திரி வேளைகள்ல யார்கிட்ட படுத்துக் கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால்... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்...என்பதுதான் அந்த மந்த்ரத்தின் அர்த்தம். உன் தாயை உன் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான்... அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்த்ரத்தின் நோக்கம்.

இப்படிப்பட்டதுதான் இறுதிச் சடங்கு.
நேருஜி இறந்தபோது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?..., தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ... என்று கேட்டான்.
அதே போல அம்மாக்களை இழிவுபடுத்தும் இறுதிச் சடங்கே உனக்கொரு நாள் இறுதிச்சடங்கு செய்ய மாட்டோமா?... - என்று எழுதியிருக்கிறார் என்பதைவிட உள்ளம் குமுறி மூடநம்பிக்கை களுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார் அக்னிஹோத்திரம்!

அதனால்தான் அவர்மீது - கோபம். அவரது மறைவு பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு!அவரது 100ஆவது வயது வரையில் - அவரை

சுருதி ஸ்மிருதி இதிஹாஸ
புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்
வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸபதி
மஹோ பாத்யாயமகா மஹோ பாத்யாய
அக்னிஹோத்திரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப்படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.சூட்சுமம் புரிகிறதா?


-------------- நன்றி:- சின்னக்குத்தூசி - "முரசொலி" (1.1.2009)

http://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_2594.html


நன்றி