சித்திரகுப்தன்:
பிரபோ! பிரபோ! எழுந்திரியுங்கள் பிரபோ!
எமதர்மன்:
என்னடா சித்திரா?! அதிகாலையில் என்னை எழுப்பாதே என்று உனக்கு எத்தனை முறைதான் கூறுவது!? அடுத்த முறை நீ என்னை எழுப்பினாய் என்றால் உன்னைத் தூக்கி எண்ணையில் போட்டு வறுத்து விடுவேன்.
சித்திரன்:
அதிகாலையா? விளையாடாதீர்கள் பிரபு! நேரம் காலை பத்தைக் கடந்து விட்டது. சூரியர் வேலைக்குச் சென்று ஐந்து மணி நேரம் ஆகப் போகிறது, ஆனால் நீங்கள் இன்னும் கண் விழித்தபாடில்லை. இந்த DTH (Direct to Hell) சேவை வந்ததில் இருந்து நீங்கள் மிகவும் கெட்டுப் போய் விட்டீர்கள். தினமும் இரவில் கண்டகண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு தாமதமாக உறங்கினால், இப்படித்தான் மதி கெட்டுப் பேசுவீர்கள்.
எமதர்மன்:
சரியடா சித்திரா. காலையிலேயே என்னைக் கடுப்பேற்றாதே! எனது நிகழ்ச்சி நிரல் என்ன இன்றைக்கு!? எத்தனை பேரின் உயிர்களை எடுக்க வேண்டும்!?
சித்திரன்:
அதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. தங்களுக்கு ஒரு ஓலை வந்திருக்கிறது.
எமதர்மன்:
ஓலையா!? நானென்ன குடிசையாக் கட்டப் போகிறேன்? எவனடா எனக்கு ஓலை அனுப்பியது!?
சித்திரன்:
எமலோக வங்கியில் இருந்து வந்து உள்ளது.
எமதர்மன்:
கிராதகர்கள்.. நானே iPohone, iPod என்று நவீனமாக மாறி விட்டேன். இவர்கள் இன்னும் இந்த ஓலையப் பிடித்து தொங்கிக் கொண்டு, மற்றவர்களின் உயிரெடுக்கும் என்னையே உயிரெடுக்கிறார்கள். டெக்ஸ்ட் செய்ய மாட்டார்களாமா!? அடுத்த முறை ஓலை அனுப்பட்டும், அவர்களை வைத்துக் கொள்கிறேன். சரி.சரி. எதற்கு இந்த ஒலை!?
சித்திரன்:
தங்களுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கக் கடன் தருகிறார்களாம். எருமையில் உங்களைப் பார்க்க சகிக்கவில்லை என பின்குறிப்பு வேறு இணைத்துள்ளார்கள்.
எமதர்மன்:
வாகனம் வாங்கி…!? தற்பொழுது பெட்ரோல் விற்கிற விலையில் நானும் வாகனம் வாங்கினால், பூலோகத்தில் போய் பிச்சைதான் எடுக்க வேண்டும். இருக்கின்ற மரியாதையையும் நான் இழக்க விரும்பவில்லை. அந்த ஓலையை அப்படியே மடித்து வை. இன்றும் மின்வெட்டு இருக்குமாம். விசிற வைத்துக் கொள்ளளாம், என்ன!
சித்திரன்:
அப்படியே செய்கிறேன் பிரபு! இன்று தங்களின் நீதி விசாரணை பூலோகத்தில். மின் துறை அமைச்சர் ஒருவரின் மீது ஏகப்பட்ட புகார்கள் எனது இமெயில் ஐடிக்கு வருகின்றன.
எமதர்மன்:
அப்படியா? இதை ஏன் எனக்கு முதலிலேயே சொல்லவில்லை?
சித்திரன்:
நீங்கள்தான் நடிகைகள் படம் போட்ட இமெயில் வந்தால் மட்டும் ஃபார்வர்ட் பண்ணச் சொன்னீர்கள். மறந்து விட்டதா?
எமதர்மன்:
சரி,சரி. காலை வாராதே. வா உடனே பூலோகம் கிளம்புவோம். எங்கே எனதருமை எருமை வாகனம்? … ஹே, என்ன சித்திரா அது? எருமையின் கொம்பில் இரண்டு விளக்குகளை கட்டி வைத்துள்ளாய்!?
சித்திரன்:
பிரபோ.. நாம் செல்வதோ பூலோகத்துக்கு. அங்கு மின் வெளிச்சம் இருக்குமோ, இருக்காதோ, யார் கண்டது? அதுவுமில்லாமல், பகலிலேய தறி கெட்டு ஓடும் தண்ணீர் லாரிகளும், மணல் லாரிகளும் நிறைந்த பயங்கர பிரதேசம் அது. அதில் எதாவது ஒன்று நமது எருமையின் மீது மோதி, நம்மையே எமலோகத்துக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது?! அதான் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு விளக்குகளைப் பொருத்தி விட்டேன்.
எமதர்மன்:
அறிவாளியடா நீ. அடுத்த அப்ரைசலில் உன்னை பதவி உயர்த்துகிறேன். சரி, வா கிளம்பலாம்.
– அடுத்த காட்சி பூலோகத்தில், அமைச்சரின் அறையில் –
எமதர்மன்:
என்னடா இது? மணிரத்னம் படக் காட்சி போல ஒரே இருட்டாக உள்ளது. நடுச்சாமத்தில் வந்து விட்டோமோ!?
சித்திரன்:
இல்லை பிரபு. இது மாலைதான். இது அமைச்சரின் பகுதியில் மின்வெட்டு இருக்கும் நேரம். அதனால்தான் இப்படி. அமைச்சர் அதோ தூங்கிக் கொண்டு இருக்கிறார். எழுப்புகிறேன். விசாரிப்போம்.
– சித்திர குப்தன் அமைச்சரை எழுப்புகிறார் –
அமைச்சர்:
யார் நீங்க? என்னோட ரூம்ல என்ன பண்றீங்க?
சித்திரன்:
நான் சித்திர குப்தன். இவர் எமதர்மன். உங்களை நரகத்துக்கு அனுப்புமாறு பூலோகத்தில் இருந்து நிறைய இமெயில்கள் எங்களுக்கு வருகின்றன. அதனால்தான் விசாரிக்க வந்துள்ளோம்.
அமைச்சர்:
என்னிடமே விசாரணையா? இது தலைவருக்கு தெரிந்தால் நடப்பதே வேறு!
எமதர்மன்:
உங்கள் தலைவர் இருட்டில் நடக்க கஷ்டப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். நீர் ஒழுங்காக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும். ஏன் இந்த அளவுக்கு மின்வெட்டு செய்கிறீர்கள்? ஏன் மக்கள் மீது இந்தக் கொலைவெறி?
அமைச்சர்:
கடந்த கழக ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்று பிரச்சாரம் செய்தோம். அதைப் போல இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஒரு பஞ்ச் லைன் வேண்டாமா? ‘கற்கால ஆட்சி’ எனப் பிரச்சாரம் செய்வோம். அதுவுமில்லாம, மக்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க, கழகத்தால் கொண்டு வரப்பட்ட அருமையானத் திட்டம் இந்த மின்வெட்டு. வரலாறு திரும்புகிறது கழக ஆட்சியில்.
எமதர்மன்:
நீர் முதலில் திரும்பி நின்று பதில் சொல்லும். சுவற்றிடம் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
அமைச்சர்:
அப்படியா.. இருட்டுல ஒண்ணும் தெரியல.
சித்திரன்:
இதெல்லாம் வேலைக்காகாது. எப்போது இந்த நிலைமை சரியாகும்? எமதர்மர் வேறு இரவில் ‘எஃப்’ டிவி பார்க்க முடியாமல் சிரமப்படுகிறார்.
எமதர்மன்:
சித்திரா.. இப்படி எக்குத்தப்பாக என்னை மாட்டி விடுவதை முதலில் நிறுத்து.
அமைச்சர்:
இந்த நிலைமையை 2011க்குள் சரி செய்து விடுவோம். அப்படி சரி செய்ய முடியாவிட்டால், மக்கள் மறுபடியும் எங்களுக்கே தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, இந்த நிலைய சரி செய்ய ஆணையிடுவார்கள்.
எமதர்மன்:
மறுபடியும் கழக ஆட்சியா.. ?! பூலோகம் தாங்காது. நல்ல வேளை, எமலோகத்தில் கழகங்கள் இல்லை. தப்பித்தோம்.
– அமைச்சரின் அறைக்கு வெளியே இருட்டில் ஒளிந்திருந்து பார்க்கும்
விகாந்த், இன்ஸ்டண்ட் அறிக்கை விடுகிறார் –
விகாந்த்:
என்னது எமலோகத்தில் கழகங்கள் இல்லையா? அய்யகோ.. நான் எப்படி அங்கே அரசியல் நடத்துவேன்? கழகங்கள் எதாவது இருந்தாத்தானே, அவங்கள காட்டுத்தனமா திட்டி பொழுதப் போக்கலாம். இல்லன்னா கட்சி வளராதே!? மக்களே.. இதுதான் கழக ஆட்சியின் நிலைமை. பூலோகத்தின் மாறி மாறி கழகங்கள் ஆட்சி செய்து, கேவலம் ஒரு கிளையைக் கூட எமலோகத்தில் துவக்க முடியவில்லை. இதையெல்லாம் மாத்தனும்னா, 2011-ல் என்னை முதலமைச்சராக்குங்கள். இல்லையென்றால், என் படங்கள் மீண்டும் வருமென்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.
– அமைச்சரின் அறையில் –
சித்திரன்:
பிரபோ! சீக்கிரம் தீர்ப்பைச் சொல்லுங்கள். எருமை தலையில் இருக்கும் விளக்கு அணைவதற்குள் எமலோகம் திரும்பியாக வேண்டும் . பதிவு வேறு பெரியதாகி விட்டது. இதை எழுதுபவன், அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல், குழம்பிக் கொண்டிருக்கிறான்.
ஆமா.. என்ன தீர்ப்பு சொல்றதுன்னு எமனுக்கே தெரியல. நீங்க எமனா இருந்த என்ன தீர்ப்பு சொல்வீங்க? ஒரு நாளைக்கு நீங்களும் நாட்டாமையா மாறுங்க, உங்க தீர்ப்புக்காக எமன் பாசக்கயிறுடன் வெயிட்டிங்
நன்றி
http://veerasundar.com/tamil/2008/10/16/enthiralogathil-eman/
Cricket net practice
2 ஆண்டுகள் முன்பு
0 comments:
கருத்துரையிடுக